ஒரு அப்பாவி வாக்காளனின் புலம்பல்கள்.



வணக்கம்.
மீண்டுமொருமுறை நாம் வாக்குச்சாவடிகளுக்கு “வருகைபுரிய” இருக்கிறோம். காலச்சுழற்சியில் இந்தியாவின் – சுதந்திர இந்தியாவின் – 16வது தேர்தலில் நாம் வாக்களிக்க இருக்கிறோம். நம் கைகளில் ஐந்தாண்டுகளுக்குஒருமுறை மட்டுமே தரப்படுகிற அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வாழ்க்கை அனுமதிச்சீட்டு. நாம் சில விஷயங்களை  நினைவுகொள்ளவேண்டிய தருணம் இது, ஆமாம் அது மிக அவசியமானதும்கூட.
ஒரு நாட்டின் மிக அடிப்படைத்தேவைகளான கல்வி, உணவு, மருத்துவம் போன்றவற்றில் சுதந்திரத்திற்கு பின்பான இந்த 67 வருடங்களில் நமது நிலை என்ன? ஏற்றுமதியிலும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் நாம் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறோம் அல்லது தள்ளப்பட்டிருக்கிறோம்? பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் நமது முன்னேற்றம் அல்லது பின்னடைவிற்கான உண்மையான காரணிகள் என்ன? நதிநீர் இணைப்பு இதுவரை சாத்தியமாகாததன் மர்மம் என்ன?
      இதற்கெல்லாம் ஒரே பதில்தான். அது, நம்முடைய எதற்கும் அசராத  சகிப்புத்தன்மை”.
நமது சகிப்புத்தன்மையின்மேல் கட்டமைக்கப்படுகிற அரசு, அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதன் காரணமாகவே இந்தக் கேள்விகளுக்கு நமக்கு விடைதெரியாமலேயே, தெரிந்துகொள்ள முயலாமலேயே நாம் தொடர்ந்து “வாழ்கிறோம்”
நமது முதுகெலும்பில் நாம் எப்போது “ரப்பரைஸைடு” ரத்தமேற்றிக்கொண்டோம், ஏன் எது நடந்தாலும் – 3ஜி,4ஜி அல்லது 5ஜி- நமக்கு எதுவுமே சம்பந்தமில்லாதது போல நடந்துகொள்ளப் பழகிக்கொண்டோம். நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கிற பாலியல் பலாத்காரங்கள் ஏன் நமக்கு வெறும் செய்தியாக மட்டும் தெரிகிறது. என்.ஜி.ஜி.ஓ க்களின் தன்னார்வத் தொண்டின் பின்னாலிருக்கிற பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வுக்கலாச்சாரப் பின்ணனி பற்றி நாம் ஏன் கண்டுகொள்வதே இல்லை. குற்றம் நிரூபிக்கப்படாமலேயே, அல்லது நீதிபதி குற்றமற்றவர் என்று அறிவித்த பின்னும் விடுதலை செய்யவோ அல்லது தூக்கிலிடவோ முடிவெடுக்க இயலாத அரசை நாம் ஏன் விமர்சிக்க மறுக்கிறோம். நமது இயற்கை வளங்களை சுரண்டிவிற்று வயிறுவளர்க்கிற நமது மாண்புமிகு மந்திரிகளை நாம் விலகிநின்று வேடிக்கை மட்டுமே பார்ப்பது எதனால்? அதெல்லாம் போகட்டும், திறந்திருக்கிற ஆழ்குழாய் கிணறுகளுக்கு 150 ரூபாய் விலையுள்ள ஒரு மூடியைப்போட்டு மூடாமல், மாதமொரு குழந்தையை பலிகொடுக்கிறோமே அது எதனால்?
              நமது முதுகெலும்பு வளையும் தன்மை கொண்டதுதான், ஆனால் அது நமது முதல்வர் முன்பு வளைகிற அமைச்சர்களின் முதுகுகள் போல ஆகிவிடக்கூடாது.

      சொல்லால் சொல்லை அறி” என்றார் கபீர்தாசர். “எவர்சொன்ன சொல்லானாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்” என்று மந்தைகளாக வாழ்ந்த மனித சமுதாயத்தை தனது புத்திசாலித்தனமான உரைகளால் திசைதிருப்பி அடிமை வாழ்விற்கு முடிவுகட்டினார் சாக்ரடீஸ். இன்று நமக்கு தலைவர்களாக வரப்போகிறவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் உரைகளைக் கேளுங்கள். சேறும், சகதியும் வாரி எறியப்படுகிற வீதிகளில் நாம் வாக்குச் சீட்டுகளோடு பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறோம். யாரை நம்புவது என்று தெரியவில்லை.
நீங்கள் யாரையாவது கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றுபவராக இருந்தால் விட்டுவிடலாம், அப்படி இல்லையென்றால் நீங்கள் நிச்சயம் பரிதாபமானவர்தான். அதுவும் நீங்கள் தினசரி அரசியல் நிகழ்வுகள் பற்றிஅறியாதவராக இருந்துவிட்டாலோ உங்கள் நிலை இன்னும் பரிதாபமானது. வாக்குறுதிகளை, இலவசங்களை, உறுதிமொழிகளை நாம் நம்பப்போவதில்லை, ஆனால் அதே சமயம் உள்ளூர் அரசியல்வாதிகளால் நாம் தேவையான அளவு குழப்பப்பட்டிருக்கிறோம். ஜாதி அல்லது மதம் நம்முடைய வாக்குகளைத் தீர்மானிக்கிறது. அதன் பெயரால் நாம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம். மதசார்பின்மையைப் பேசுகிற கட்சி தனது வேட்பாளர்களை அந்தந்தப் பகுதியில் வாக்குகள் அதிகமுள்ள சமுதாயத்திலிருந்தே அல்லது மதத்திலிருந்தே தனது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. மதவாதக்கட்சி என்று அறியப்படுகிற கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்தத் தேர்தலே மதவாதத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரே நடக்கிற யுத்தம் என்பதாக சித்தரிக்கப்படுகிற இந்த குடுமிபிடிச்சண்டையில் நாம் மாறாமல் ஒரு குணத்தை விடாமல் பிடித்துத்தொங்கிக்கொண்டிருக்கிறோம். அது “சகிப்புத்தன்மை”

      பாராளுமன்றத்திற்கு நாம் சென்றமுறை அனுப்பிய 40 பேரில் பாராளுமன்றம் நடைபெற்ற நாட்கள் அத்தனைக்கும் ஆஜரானவ்ர் ஒரே ஒரு நபர்தான் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். நம்மை முன்னிலைப்படுத்தி, நமக்கான குரல்கொடுக்க நாம் அனுப்பிய நபர்களுக்கு, பாராளுமன்றத்தில் சென்று குரல்கொடுக்கக்கூட வேண்டாம், உண்மையிலேயே அங்கு என்ன நடக்கிறது என்பதைக்கூடச் சென்று பார்க்க நேரமில்லாமல் போவதை நாம் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோமே, அதன் பெயர் என்ன? இதற்கெல்லாம் உச்சமாக எம்,பிக்களுக்கு என்று தொகுதிமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டிருந்த சில கோடி ரூபாய்களைக்கூட அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?
இவையெல்லாம் தினமும் நீங்கள் பத்திரிகைகளில் வாசித்துக் கொண்டிருப்பவர்கள்தான், இது ஒன்றும் புதிய தகவலாக இருக்கப்போவதில்லை, ஆனாலும் வாக்குச்சாவடியின்முன் நிற்கின்ற இந்த தருணத்தில் இவைகளையெல்லாம் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். நாம் தேர்ந்தெடுக்கப்போகிறவர் ஒரு சூப்பர்மேனாக நிச்சயமாக இருக்கமுடியாது ஆனால் அடிப்படை கடைமையுணர்ச்சி உள்ளவராக, நாட்டு முன்னேற்றம் குறித்து கவலைகொள்பவராக, மக்கள் முழு பாதுகாப்போடு வாழ்வதை உறுதி செய்யக்கூடியவராக, நாம் எளிதில் அணுகக்கூடியவராக, பாராளுமன்றம் என்கிற மாபெரும் சபையில், நாகரிகம் பேணுபவராக, நமக்கான உரிமைகளுக்காக ஒருமுறையேனும் குரல்கொடுப்பவராக, இருந்தால், இ..ரு…ந்…தா…ல் நமக்கும், நாட்டுக்கும் நல்லது. அதற்கு நீங்கள் உங்களாலான உதவியைச் செய்ய வேண்டும். தயங்காமல் வாக்களிக்க வேண்டும். நன்றி.
                                         இப்படிக்கு
                               ஒரு அப்பாவி வாக்காளன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!